2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது. மதவாத சக்திகளை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக உடன் கூட்டணி அமைப்பதாக காங்கிரஸ் கூறியது. அதோடு ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் இடம் பெற உள்ளனர் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 2026 தேர்தலுக்கு முன்பே திமுக ‘ஆட்சியில் பங்கு’ தமிழகம் ஏற்காது என்று வெளிப்பாய்யாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிப்பூர்வமான வரலாற்று சிறப்புமிக்க தருணம். 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்கு தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய அரசு, புதிய நம்பிக்கை.” என பதிவிட்டுள்ளார்.



