குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க விழிப்புணர்வு மிகவும் அவசியம். குறிப்பாக, தங்களுக்கு நேரும் தவறான தொடுதல் அல்லது அத்துமீறலை அடையாளம் கண்டு, அதை நம்பிக்கையான பெரியவர்களிடம் உடனடியாக தெரிவிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். அந்த வகையில், ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சி 8 வயது சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை வெளிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது.
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து எடுத்துரைக்கும் விழிப்புணர்வு காட்சி இடம்பெற்றுள்ளது. தங்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல் நடைபெற்றால், அதை மறைக்காமல் பெற்றோர் அல்லது நம்பிக்கையான பெரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே அந்தக் காட்சியின் முக்கிய கருத்தாக இருந்தது. சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் கடந்த 30-ம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்துள்ளார்.
படத்தில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு காட்சியை பார்த்த சிறுமி, தனக்கும் இதேபோன்ற அத்துமீறல் நடந்ததாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, தனது தாய் வீட்டு வேலை செய்து வரும் இடத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் தாய் மற்றும் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.
சிறுமியின் தாய் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். சில நேரங்களில் தனது குழந்தைகளையும் அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மகள் கூறிய தகவலைக் கேட்டதும் தந்தை உடனடியாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பெரியன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளிடம் ‘குட் டச், பேட் டச்’ போன்ற அடிப்படை பாதுகாப்பு விழிப்புணர்வை சிறு வயதிலேயே ஏற்படுத்துவதன் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள் பொழுதுபோக்கைத் தாண்டி இதுபோன்ற முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, அது குழந்தைகளின் பாதுகாப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
Also Read: பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு… மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 7 பேர் பலி; 15 பேர் படுகாயம்!



