அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிழவி வந்தது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார்.
அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் பின்னர் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.
அதுமட்டுமின்றி செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். செங்கோட்டையனின் இந்த செயல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ” ஒருங்கிணைந்த அதிமுகவை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல முடிவு வரும். அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பாஜக ஒருபோதும் எனக்கு அறிவுறுத்தல் கொடுத்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா ஒரு முறைதான் என்னை அழைத்தார். அடுத்து இருமுறை நானே சென்று சந்தித்தேன். ஆனால் பாஜக ஒருபோதும் எனக்கு அறிவுறுத்தல் கொடுத்ததில்லை என தெரிவித்தார். தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி தொடர்பாக இப்போது எதுவும் சொல்ல இயலாது. எல்லோரும் ஒன்றிணையும் காலம் விரைவில் வரும் எனக் கூறினார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாக முன்னதாக கூறியிருந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: மா இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..? சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து..!!



