நியூயார்க் மாநிலத்தின் கிராமப்புறப் பகுதிகள் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் தட்டம்மை நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் கேத்தி ஹோச்சூல் திங்கள்கிழமை நேற்று மாநில அளவிலான பேரழிவு அவசரநிலையை அறிவித்துள்ளார்.
அக்டோபர் 3 நிலவரப்படி, நியூயார்க்கில் இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 108 பேருக்குத் தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நியூயார்க் நகரில் 7 நபர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 101 நபர்களுக்கும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.
ஜூலை 15 முதல், 18 மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்பட்ட கிராமப்புற மக்களிடையே 92 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்கா அளவிலும் உலக அளவிலும் தட்டம்மை பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான பென்சில்வேனியாவிலும் இந்த நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. அங்கு அக்டோபர் 2 வரை 977 பாதிப்புகளும் 5 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான தட்டம்மை பரவலாகும்.
தடுப்பூசி பெற கூடுதல் வசதிகள்: கிராமப்புறப் பகுதிகளில் ஜூலை 15 முதல் உள்ளாட்சி சுகாதாரத் துறைகள் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட எம்.எம்.ஆர் (MMR) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஆளுநரின் இந்த அவசரநிலை உத்தரவு மூலம், எம்.எம்.ஆர் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்குப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவப் பணியாளர்கள், மருத்துவப் பாராமெடிக்குகள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி மருந்தாளுநர்கள் 2 வயதுக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த முடியும்.
மேலும், தட்டம்மை அறிகுறி உள்ளவர்களுக்குப் பரிசோதனைகளைப் பரிந்துரைக்கப் பதிவுசெய்த செவிலியர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செலுத்தப்படும் அனைத்து எம்.எம்.ஆர் தடுப்பூசி விவரங்களும் 72 மணி நேரத்திற்குள் மாநில அல்லது நகரத் தடுப்பூசிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
“சமீபத்திய தட்டம்மை பாதிப்புத் தரவுகளைப் பரிசீலித்த பிறகு, நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவசரநிலையை அறிவித்துள்ளேன். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களால் யாரும் தீவிரமாகப் பாதிக்கப்படவோ உயிரிழக்கவோ கூடாது” என்று ஆளுநர் கேத்தி ஹோச்சூல் தெரிவித்துள்ளார்.
இந்த அவசரநிலை உத்தரவு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதுடன், நவம்பர் 4 வரை நீடிக்கும். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தரவுகளின்படி, அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 3,900 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான தட்டம்மை பரவல் ஆண்டாகக் கருதப்படுகிறது.



