தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமணப் பரிசு அளிக்க வேண்டும் என்ற ஆசையில், நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறியுள்ள நிலையில், இது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரான போலி மோசடி வலை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (32) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கும், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணப் பரிசாகத் தனது மனைவிக்குப் பிரத்யேகப் பரிசு வழங்க நினைத்த சரவணன், இணையதளத்தில் நிலவில் இடம் விற்பனை செய்யப்படுவதாக வந்த விளம்பரத்தை நம்பி முன்பதிவு செய்துள்ளார்.
இதற்காக அவரிடம் இருந்து ரூ.23,000 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், சந்திரயான் விண்கலம் தரையிறங்கிய ‘சிவ சக்தி’ முனை பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், வரும் செப்டம்பர் 17 அன்று அவரது வருங்கால மனைவி நிலவுக்குப் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரவிய தகவல் பேசுபொருளானது.
இருப்பினும், நிலவில் தனிநபர்கள் இடம் வாங்குவது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு ஏமாற்று வேலை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கடந்த 1967-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்ட ‘சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி’ (Outer Space Treaty), நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பொருட்கள் எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது தனிநபர்களின் வணிக உரிமைக்கோ உட்படாது. விண்வெளி என்பது மனிதகுலத்தின் பொதுவான சொத்தாக கருதப்படும் சூழலில், இத்தகைய விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



