தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது..
மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறிய நிலையில் இவர்கள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.
டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் விஜய்யின் தவெகவில் இணையக்கூடும் என்று தகவல் வெளியானது.. ஆனால் சமீபத்தில் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் அடங்கிய போஸ்டர்களில் டிடிவி தினகரன் போட்டோவும் இடம்பெற்றிருந்தது.. இதனால் அவர் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைவார் என்று கூறப்பட்டது..
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைவதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்க புறப்பட்ட போது அவர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.. அப்போது பாஜக கூட்டணியில் இணையப்போவதாக தெரிவித்தார்.. மேலும் “ இது அமமுகவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே நல்ல மாற்றமாக இருக்கும்.. தமிழ்நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்காக ஒரு கூட்டணியில் நாங்கள் இணைய உள்ளோம்.. மக்களாட்சி வருவதற்கு, நல்லாட்சி வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்..” என்று கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர் “ விட்டுக் கொடுப்போர் கெட்டுப்போவதில்லை.. எனவே எங்களுக்குள் இருந்தது பங்காளி சண்டை தான்.. பழைய விஷயங்களையே நினைத்து, கட்சி நலனையும், தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.. அம்மாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு, மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் நல்லாட்சி, மக்களாட்சி வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்..” என்று தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைகிறார்..



