பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 180 அலுவலர்களுக்கு ‘முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பணியில் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் காட்டியவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தப் பதக்கங்கள், இந்த ஆண்டு கீழ்க்கண்டவாறு துறைவாரியாக பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
காவல்துறை: தலைமைக் காவலர் முதல் எஸ்பி (SP) வரை 138 பேர்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரை 20 பேர்
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை: முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரை 10 பேர்
ஊர்க்காவல் படை: ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரை 5 பேர்
விரல்ரேகைப் பிரிவு: கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 2 பேர்
தடய அறிவியல் துறை: அலுவலர்கள் 4 பேர்
சிறுவனைக் காப்பாற்றிய வீரருக்கு அண்ணா வீரதீர் பதக்கம்:
கடந்த மே 19 அன்று, நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு, நடுக்கடலில் 100 அடி தூரத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் சைலேஷை, இரவுப் பணி முடிந்து வீடு திரும்பிய தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர் தன் சொந்த உயிரைப் பொருட்படுத்தாமல் நீந்திச் சென்று துணிச்சலுடன் காப்பாற்றினார். அவரது இந்த தன்னலமற்ற வீரச் செயலைப் பாராட்டி, அவருக்கு ‘தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர் பதக்கம்’ வழங்கப்படும் என முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார்.. இப்பதக்கங்கள் அனைத்தும் விரைவில் நடைபெறவுள்ள தனி விழாவில் முதல்வரால் நேரில் வழங்கி கௌரவிக்கப்படும்.



