பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அசோக் தாம் சிவன் கோயிலில் சாவன் மாதத்தின் சிறப்பு வழிபாட்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கோயில் அருகே உள்ள அசோக் தாம் ஹால்ட் ரயில் நிலையம் பகுதியில் திடீரென ஏற்பட்ட பதற்றம் கூட்ட நெரிசலாக மாறியதில் 7 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோயிலை நோக்கி வந்துள்ளனர்.
ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் அசோக் தாம் ஹால்ட் நிலையத்தில் நின்றதால், அங்கிருந்த பக்தர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டம் சென்ற பாதையில் இருந்த மின் கம்பம் ஒன்று விழுந்துள்ளது. அது மின் கம்பி என தெரியாத நிலையில், மின்சாரம் பாய்வதாக கூட்டத்தில் தகவல் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மத்தியில் திடீரென பீதி ஏற்பட்டுள்ளது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றத்தில் பக்தர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு திசைகளில் நகர முயன்றுள்ளனர். இதனால் கூட்டத்தின் அழுத்தம் அதிகரித்து தடுப்புகள் உடைந்ததாகவும், குறிப்பாக பெண்கள் சென்ற பகுதியில் பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சில நிமிடங்களிலேயே நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, காயமடைந்தவர்கள் லக்கிசராய் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. சாவன் மாத திங்கள்கிழமைகளில் அசோக் தாம் சிவன் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில், இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் கூட்டக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்ததா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
Also Read: மது வாங்க பணம் கேட்ட மகன்.. மறுத்த பெற்றோருக்கு நேர்ந்த பயங்கரம்!



