உலக சினிமா வரலாற்றில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை, ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தை முந்தி மார்வெல் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பான Avengers: Endgame மீண்டும் கைப்பற்றியுள்ளது.
உலகளவில் 2.925 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.28,300 கோடி) கோடிக்கு மேல்) வசூலித்து, அவதார் படத்தின் 2.923 பில்லியன் டாலர் வசூல் சாதனையை எண்ட்கேம் திரைப்படம் மிக குறைந்த இடைவெளியில் முறியடித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக உலக பாக்ஸ் ஆபீஸின் ‘நம்பர் 1’ சிம்மாசனத்திற்கான போட்டி இவ்விரு பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு இடையே மாறி மாறி அரங்கேறி வருகிறது.
2009-ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படம், உலகளவில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று சுமார் 10 ஆண்டுகள் அசைக்க முடியாத முதலிடத்தில் நீடித்தது. பின்னர், 2019-ஆம் ஆண்டு வெளியான மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் தனது அசுரத்தனமான முதல் திரையரங்க ஓட்டத்திலேயே ‘அவதார்’ படத்தின் வசூல் சாதனையை தகர்த்து முதலிடத்தைப் பிடித்தது.
எனினும், அந்த முதலிடம் நீடிக்கவில்லை. 2021-ஆம் ஆண்டு அவதார் படத்தின் இரண்டாவது பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வெளியாவதற்கு முன்பாக, முதல் பாகம் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதனால் கூடுதல் வசூலை வாரிக் குவித்த அவதார், ‘எண்ட்கேம்’ திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலகின் நம்பர் 1 திரைப்படமாக அரியணையில் அமர்ந்தது. இதுவரை 5 முறை திரையரங்குகளில் மறுவெளியீடு கண்டு அவதார் உலகளவில் 2.923 பில்லியன் டாலர்களை எட்டியிருந்தது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்னி நிறுவனம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை அண்மையில் மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்தது. இந்த மறுவெளியீட்டின் மூலம் மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் வசூல் எகிறி, உலகளவில் 2.925 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது. இதன் மூலம் நவி உலக வேற்றுகிரகவாசிகளை வீழ்த்தி, பூமியின் சூப்பர் ஹீரோக்களான அவெஞ்சர்ஸ் மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் மகுடத்தை தட்டிச் சென்றுள்ளனர்.



