அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், வழிகாட்டுதல்களை உருவாக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இது விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்; தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று கூடுவார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர்வழிபாட்டுக்கும், கும்பல் கலாசாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற வாக்குப் பண்டங்களாகவும் ஆக்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ‘ரோடு ஷோக்கள்’ என்ற பெயரில் சிறு நகரங்களிலும் பெருநகரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதன் உச்சகட்டமாகவே கரூரில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளன. மக்களை, கூலி கொடுத்து திரட்டி, மணிக்கணக்கில் தெருவோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் ‘ரோடு ஷோ’ முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.



