1 முதல் 50 வரை சரியாக எழுதவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தந்தை ஒருவர் தனது நான்கரை வயது மகளை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது..
31 வயது கிருஷ்ணா ஜெய்ஸ்வால் என்பவர், சிறிய தவறுக்காக தனது மகள் வன்ஷிகாவை உருட்டுக்கட்டையால் பலமுறை தாக்கி, தரையில் தூக்கிப் போட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் ஜாட்சென்ட்லியில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் நடந்தது. அந்த குடும்பம் உத்தரபிரதேசத்தின் சோன்பத்ராவிலிருந்து இங்கு குடிபெயர்ந்திருந்தது.
ஜெய்ஸ்வால் தனது மகளைத் தாக்கிய பிறகு, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். விளையாடும்போது படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார்.. எனினும் தந்தை சகோதரியை கொடூரமாக தாக்கியதை வீட்டில் இருந்த 7 வயது மகன் தாயிடம் உண்மையான சம்பவத்தைக் கூறினான். இதையடுத்து அவரின் மனைவி இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
எனினும் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, மருத்துவமனையில் அவள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை, ஃபரிதாபாத்தில் ஜெய்ஸ்வால் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
ஜெய்ஸ்வாலும் அவரது மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் மாற்றுப் பணி நேரங்களில் வேலை செய்து வந்தனர், மேலும் அந்தப் பெண் பள்ளிக்குச் செல்லாததால், அவளுக்கு தந்தை வீட்டிலேயே பாடம் கற்பித்து வந்தார். இந்த கொடூரமான சம்பவம் நடந்தபோது, இந்த தம்பதியரின் மற்ற இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். காவல்துறை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது, மேலும் குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.



