பெங்களூருவில் இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு சமையல் செய்ய ஒரு நாளைக்கு இரண்டு முறை வந்து செல்லவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடனும் சமையல்காரர்களை நியமிக்க மாதம் ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை செலவாகிறது. ஆனால், அவர்கள் தயாரிக்கும் உணவு பெரும்பாலும் சராசரி ரகமாகவே இருக்கும்போது இந்தச் செலவு மதிப்புள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி பெங்களூருவைச் சேர்ந்த மேகா என்ற எக்ஸ் தள பயனர் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகாவின் கூற்றுப்படி, சமையல்காரர்கள் வழக்கமாக வந்து காய்கறிகளை நறுக்கி, இரண்டு உணவுகளை விரைவாகத் தயாரித்துவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள். பருப்பு, உருளைக்கிழங்கு முதல் சோயா மற்றும் சிக்கன் வரை எதைச் சமைப்பதாக இருந்தாலும் குக்கர்தான் அவர்களின் பிரதான ஆயுதம் என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். உணவு வகைகளை எப்படி கேட்பது என்று நாம் தொடர்ந்து விளக்கிக் கூறாவிட்டால் அதன் சுவை சராசரியாகவே இருக்கும் என்றும், இல்லையெனில் அதிக எண்ணெயும் மசாலாவும் மட்டுமே உணவின் சுவைக்குத் கைகொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவுக்காக அல்ல, சௌகரியத்திற்காகவே பணம் கொடுக்கப்படுகிறது என்பதே மேகாவின் முக்கிய வாதமாகும். உணவின் தரம் எப்படி இருந்தாலும், ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை சமைப்பது பற்றி யோசிப்பதில் இருந்து தப்பிக்கவே மக்கள் ரூ.8,000 வரை செலவிடுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவாதம் சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றாலும், சில பயனர்கள் சமையல்காரர்களை அமர்த்துவது பணத்திற்கு மதிப்புடையது அல்ல என்றும், திட்டமிட்டு நாமே சமைக்கலாம் என்றும் வாதிட்டனர்.
மறுபுறம், சமையல் செய்வதில் உள்ள சிரமங்களைச் சுட்டிக்காட்டிய பல நெட்டிசன்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். காய் நறுக்குவது மற்றும் சமைப்பது எளிது என்று நாம் நினைத்தாலும், காய்கறி வாங்குவது, கெட்டுப்போகாமல் பாதுகாப்பது என அதன் பின்னணியில் பெரும் திட்டமிடல் இருப்பதாக ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். மேலும், பெங்களூருவுடன் ஒப்பிடுகையில் சென்னையில் இருவர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு வேளை சமையலுக்கே ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை ஆவதாக மற்றொருவர் குறிப்பிட்டார். சிலரோ தங்கள் சமையல்காரர்கள் ஓட்டல் சுவையில் அற்புதமாக சமைப்பதாகப் பாராட்டித் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.



