ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையின்றி வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தான் எவ்வித அவசரத்திலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Fox News செய்தியாளர் டிரே யிங்ஸ்ட் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடலின் ஹார்மூஸ் நீரிணை கட்டுப்பாடு குறித்து ஈரானும் ஓமனும் நடத்தி வரும் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, “இதில் ஓமன் குறுக்கிட்டால் அவர்கள் மீது கடுமையான குண்டுவீச்சு நடத்தப்படும்” என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க கடற்படையின் முற்றுகை ஈரான் அரசிற்குப் புதிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவும், ஈரான் வெளிப்புறத்திற்கு வேறு மாதிரிப் பேசினாலும் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்காசியாவில் அமெரிக்காவின் ஆயுதப் பங்கிருப்பு குறைந்து வருவதாக எழுந்தக் கருத்துகளை மறுத்த டிரம்ப், அமெரிக்கா இதுவரை பயன்படுத்தியது மிகச் சிறிய அளவிலான ஆயுதங்களே என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹார்மூஸ் நீரிணை வழியே வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவது குறித்து ஈரானும் ஓமனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, இரு நாடுகளும் கூட்டுப் போக்குவரத்து வரைபடம் ஒன்றை இறுதி செய்துள்ளன.
இந்த பேச்சுவார்த்தை குறித்துக் கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், ஹார்மூஸ் நீரிணையில் உருவான பாதுகாப்பற்ற நிலைக்கு அமெரிக்காவின் சட்டவிரோத ராணுவ நடவடிக்கையே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் என்றும், சில வெளிப்புற அமைப்புகளின் அழிவுப்பூர்வமான குறுக்கீடுகள் காரணமாகவே ஒப்பந்தம் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



