அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “லண்ட்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) இல் கையெழுத்திட்டுள்ளார். அதாவது, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் இறக்குமதிகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க அதிபர் டிரம்பிற்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
அதன்படி, அதிபர் கையெழுத்திட்ட 30 நாட்களுக்குள் இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும். ஒரு நாட்டின் ரஷ்ய எரிவாயு இறக்குமதி, ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இருந்து, அதை மேலும் குறைக்க அந்நாடு நடவடிக்கை எடுத்திருந்தால், அதிலிருந்து விலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் எண்ணெய் போக்குவரத்திற்கு உதவும் “நிழல் கடற்படை” (Shadow Fleet), கப்பல் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தடைகளை மீறும் நபர்கள் மீதும் கூடுதல் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீன அதிபர் ஷி ஜின்பிங் வாஷிங்டனுக்கு சென்று அதிபர் டிரம்பை நேரில் சந்தித்துப் பேசவுள்ள சில நாட்களுக்கு முன்பாகவே இந்தச் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டம் அமலுக்கு வந்த முந்தைய 12 மாதங்களில், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்த முதல் 5 நாடுகளின் பொருட்கள் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர்களான இந்தியாவும் சீனாவும் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இருப்பினும், அதிபர் கையெழுத்திட்டுள்ள போதிலும், இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரவில்லை. 30 நாட்களுக்குப் பிறகே இது நடைமுறைப்படுத்தப்படும். எந்த நாடுகளுக்கு வரி விதிப்பது, எவ்வளவு சதவீதம் வரி விதிப்பது மற்றும் விலக்கு அளிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் டிரம்பிடமே உள்ளது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் ஷி ஜின்பிங்கை டிரம்ப் நேரில் சென்று வரவேற்கவுள்ள நிலையில், இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டிருப்பது பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு கூடுதல் பலத்தைத் தரும் எனக் கருதப்படுகிறது.



