வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 35 முதல் 40 தொகுதிகளை கேட்டுப் பெற பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்ற போதிலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. அதிமுக – பாஜக கூட்டணி கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி உறுதியானது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருந்தாலும் திமுகவை தோற்கடிக்க வியூக வகுப்பு பணிகளை இரு கட்சிகளும் தற்போதே மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே கூட்டணி தொடர்பான அறிவிக்கும்போது பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தமிழ்நாட்டில் 2026ல் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியிருந்தார். தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. 2006ல் திமுக தனிப்பெரும்பான்மையைப் பெறாத போதிலும் கூட காங்கிரஸ் வெளியில் இருந்து தான் ஆதரவு கொடுத்தது. 5 ஆண்டுகள் திமுக ஆட்சியே நடந்தது. இந்தச் சூழலில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறியது விவாதம் ஆனது.
அதே சமயம் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் மாதம் தொடங்க பாஜக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பாஜக சார்பில் விரைவில் குழுவும் அமைக்கப்பட உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 20 தொகுதிகளை பாஜக பெற்ற நிலையில், அதனை 40 தொகுதிகளாக உயர்த்திக் கேட்க தற்போது முடிவு செய்துள்ளது.
அதே சமயம் அதிமுக குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் போட்டியிடும் திட்டம் வைத்துள்ளது. ஆகவே, மீதமுள்ள தொகுதிகளையே கூட்டணிக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக்குள் பாமக, தேமுதிக வந்தால் அதற்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆகவே, 40 தொகுதிகள் கேட்க பாஜக முடிவு செய்துள்ள நிலையில், அதிமுகவின் நிலைபாடு என்ன என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.
Read more: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்குறீங்களா..? உயிருக்கே ஆபத்து..!! – எச்சரிக்கும் நிபுணர்கள்