உயிரையே எடுக்கும் ரத்த உறைதல் குறைபாடு..!! அலட்சியம் காட்டிய நபருக்கு நிகழ்ந்த சோகம்..!! மருத்துவர் எச்சரிக்கை..!!

ரத்தம் உறைதல் குறைபாடு இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”ரத்த உறைதல் குறைபாடு நோயான ஹீமோஃபிலியா (HEMOPHILIA) விழிப்புணர்வு தினமான இன்று கிளினிக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இன்னும் நெஞ்சில் பசுமரத்தாணி போல நின்றுவிட்டது. இறந்த அந்த ஆன்மாவுக்கு இரங்கல் தெரிவித்தவனாய் அந்த நிகழ்வை பகிர்கிறேன்.

அந்த நபருக்கு வயது 30களின் இறுதியில் இருக்கும். தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சளி காய்ச்சல் என்று அடிக்கடி வருவார். அவருக்கு பிரச்சனையென ஒரே ஒரு முறை. முதலும் கடைசியுமாக அந்த ஒரு முறை மட்டுமே வந்தார். பிரச்சனை மிக சாதாரணமானது தான். முதுகில் “தசைப்பிடிப்பு” இதற்காக என்னை சந்திக்க வந்தவர். அவர் ஏன் இத்தனை நாள் என்னை சந்தித்ததில்லை என்பதற்கு விளக்கம் கூறினார்.

அவருக்கு “ஹீமோஃபிலியா” எனும் நோய் இருப்பதாகவும் அதற்கு மதுரையில் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருவதாகவும் அவரிடம் மட்டுமே காட்டுவதை பாதுகாப்பாக உணர்வதாகவும் கூறினார். நானும் அதை ஆமோதித்தேன். இது போன்ற நோய் இருப்பவர்கள் அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பதே நல்லது என்றேன்.

ஹீமோஃபிலியா எனும் நோய் பிறவியிலேயே வரும் ரத்த உறைதல் குறைபாட்டு நோயாகும். இந்த நோய் இருப்பவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட ரத்தம் அவ்வளவு எளிதில் உறையாமல் சென்று கொண்டே இருக்கும். பல நேரங்களில் கவனிக்காமல் விட்டால் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு. இப்படிப்பட்ட நோய் இருப்பவர் தசைப்பிடிப்பு என்று வந்ததும் நான் சுதாரித்து “உங்களுக்கு தசைப்பிடிப்புக்கு வலி நிவாரணி மாத்திரை கொடுத்தால் வயிற்றில் புண் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அங்கிருந்து ரத்தம் கசியவும் வாய்ப்புண்டு” என்று கூறி அவருக்கு மேலே தேய்க்கும் ஒரு பெய்ன் க்ரீம் கொடுத்து வெந்நீர் ஒத்தடம் மட்டும் கொடுங்கள் என்றேன்.

மேலும், 3 நாட்களில் சரியாகவில்லை என்றால் அந்த சிறப்பு மருத்துவரிடம் சென்று காண்பியுங்கள் என்றேன். அவரும் சென்று விட்டார். அடுத்த நாள் வலி குணமாகாததால் மீண்டும் என்னிடம் வருவதற்காக எண்ணியுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெரிய மனுஷி தனக்கு தெரிந்த ஒரு இடம் இருப்பதாக கூறி அங்கு சென்றால் மருந்து இன்றி வைத்தியம் பார்ப்பார்கள் என்று அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வைத்தியர் டம்ளர் போன்ற ஒரு குவளையை வைத்து அந்த தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் நன்றாக அழுத்தி இழுத்து விட்டுள்ளார். வலி உடனே சரியாகிவிட்டது. ஆனால் அந்த டம்ளர் வைத்த இடத்தில் அப்படியே அது பதிந்த தடம் இருந்துள்ளது. அந்த தடத்துடன் என்னை மறுநாள் குற்ற உணர்ச்சியுடன் சந்தித்தார். “சார்.. பக்கத்து வீட்டுல சொல்றாங்கனு போய்ட்டேன் சார். டம்ளர் வச்சு அழுத்தி என்னமோ பண்ணாங்க சார். இப்ப அந்த இடமே ஒரே தடமா இருக்கு.. ” நான் அந்த இடத்தை அழுத்திப் பார்த்ததில் உள்ளே ரத்தம் உறையாமல் கசிந்திருப்பதை உணர முடிந்தது.

உடனே அவருக்கு ரெஃபரல் எழுதி, அந்த சிறப்பு மருத்துவர் இருக்கும் மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும் என்று கூறி, இந்த வகை கசிவுக்கு உடனடியாக மாற்று சிகிச்சை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ரத்தம் ஏற்ற வேண்டும். அதனால் இது எமர்ஜென்சி . கண்டிப்பாக உடனே புறப்படுங்கள் என்று அனுப்பி வைத்தேன். ஆனால், விதி வலியது. வீட்டுக்கு சென்ற அவருக்கு மீண்டும் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தால் போதும். மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. அடுத்த நாள் வீட்டில் முக்கிய விசேஷம் இருப்பதால் ஒரு நாள் தள்ளிப் போடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.

அன்று இரவு படுக்கசென்ற அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர், மூச்சுத்திணறல் அதிகம் ஆகவே உடனே மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சுமார் 2 லிட்டர் ரத்தம் வயிற்றுப் பகுதிக்குள் கசிந்து உள்ளேயே இருப்பதாக கூறியிருக்கின்றனர். ஆயினும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது தாய் என்னிடம் ஒரு மாதம் கழித்து வந்து புலம்புகிறார்.

என்னாலும் இந்த நிகழ்வை நம்ப முடியவில்லை. நான் எனது வேலையை சரியாகவே செய்தும், அலட்சியத்தால் இறந்த உயிரை அதுவும் வயதில் மிகக் குறைந்த அந்த உயிரை எண்ணி இன்றும் என் கண்கள் கசிகின்றன. காரணம் அவரே அந்த வீட்டின் பொறுப்பான ஒரே பிள்ளை. அவர் சம்பாத்தியத்தில் அந்த வீடு நன்றாக இருந்தது.

ஒரே ஒரு அலட்சியம் தான் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சிதைத்து விடப்போதுமானதாக இருக்கிறது. அவர் போலி வைத்தியரிடம் சென்று இருக்கக்கூடாது, சென்றார். அவர் எனது ரெஃபரலைப் பெற்று உடனே மதுரைக்கு சென்றிருக்க வேண்டும், ஆனால், செல்லவில்லை. இதில் நிச்சயம் பலருக்கும் படிப்பினை இருக்கும் என்பதால் பகிர்கிறேன். உங்களுக்கென ஒரு மருத்துவரை வைத்துக் கொள்ளுங்கள். அவரை நம்புங்கள். அவர் கூறும் வார்த்தைகளை நம்புங்கள், கூகுளை நம்பாதீர்கள்.

மருத்துவரின் அனுபவத்திற்கு முன் கூகுள் ஒன்றுமே கிடையாது. பக்கத்து வீட்டார் கூற்றை நம்பாதீர்கள். இந்த வாழ்க்கையில் ரீசெட் பட்டன் கிடையாது. உங்களுக்கு ரத்த உறைதலில் குறைபாடு இருப்பதை உணர்ந்தால் உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது தனியாரில் குருதியியல் சிறப்பு நிபுணரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஹீமோஃபிலியாவுக்கு எதிரான சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலவசமாக கிடைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ”வாக்களிக்க வரிசையில் நிற்போருக்கு டோக்கன்”..!! சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்..!!

Chella

Next Post

நாளை வாக்குப்பதிவு..!! ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

Thu Apr 18 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் […]

You May Like