சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழகத்தின் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரு ஸ்டேடியத்தில் திரண்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த நிகழ்வில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், சிபிஎம், சிபிஐ, விசிக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சினிமாத்துறையைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
விழா தொடங்கியதும் “வந்தே மாதரம்” பாடல் இசைக்கப்பட்டு தேசிய மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் தொடங்கின. நிகழ்ச்சி மேடையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து “ச.ஜோசப் விஜய் என்னும் நான்” என தொடங்கி உறுதி மொழி ஏற்றார். அப்போது அரங்கம் முழுவதும் அமர்ந்த தொண்டர்கள் ஆரவாரம் பூண்டனர்.
அதனை தொடர்ந்து முக்கிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக என். ஆனந்த் உறுதி மொழி ஏற்று அமைச்சராக பதவி ஏற்றார். தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா, கே.ஜி.அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் உறுதி மொழி ஏற்று அமைச்சராக பதவி ஏற்றார்.
Read more: விழா மேடையில் விஜய்.. விசில் சத்தத்தால் அதிரும் அரங்கம்.. இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்பு..!



