சீனாவில் பரவும் ஒமைக்ரான் பி.எப்.7 வகை வைரஸால் தினம்தோறும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், தினந்தோறும் 5,000 பேர் உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாகவே, கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக செய்திகள் மூலம் தகவல் வெளியானது. ஆனால் அங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீன அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது. ஆனாலும் சீன மக்கள் அங்கு நிலவும் சூழலை வீடியோவாக தங்கள் சமூக வலைதளங்களில், பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனாவின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது. ஏராளமான சடலங்கள் இருப்பதும் மயானங்களில் நீண்ட வரிசை காணப்படுவதையும் அதிஅவர்கள் பதிவிட்டுள்ளனர்.

சீனாவின் தற்போதைய நிலவரம் லண்டன் நிறுவனம் அறிக்கை
சீனாவின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவில் கொரோனாவின் ஒமைக்ரான் பி.எப்.7 என்ற வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதாகவும், தினமும் அங்கு 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், நாள்தோறும் 5000 பேர் உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் நாள்தோறும் 37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸால் அடுத்தடுத்து 3 அலைகள் ஏற்படலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.