மேற்குவங்க மாநிலத்தில் ஒரே நாளில் 10 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
மேற்குவங்க மாநில முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் நேற்று ஒரே நாளில் மரணம் அடைந்தன. மேற்குவங்க மாநிலம் ஜாங்கிப்பூர் துணை பிரிவு மருத்துவமனையிலிருந்து முர்ஷிதாபாத் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முயற்சி தாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்” ஜாங்கீர்பூர் மருத்துவமனையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் போதிய மருத்துவ வசதி இல்லை என்ற காரணத்தினால் பிறந்து பத்து நாட்களுக்குள்ளான சத்து குறைபாடுடைய குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுப்பப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் மரணமடைந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மருத்துவமனையிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவர்களும் கடும் நெருக்கடியில் உள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு என தனி குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஒரே நாளில் பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.