பிரபல எல்.ஜி பெருங்காய நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் முன்னணி பெருங்காய நிறுவனங்களுள் ஒன்று எல்ஜி பெருங்காயம் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் சில நபர்கள் எல்ஜி பெருங்காயத்தின் பெயரிலேயே போலி பெருங்காயத்தூள் தயாரித்து, அதேபோன்று பிளாஸ்டிக் டப்பாக்களில் லேபில்கள் ஒட்டி அடைத்து, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதனால் பல ஊர்களில் இருந்தும் பெருங்காயம் தரம் சரியில்லை என்று எல். ஜி நிறுவனத்திற்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் பெருங்காயம் நிறுவனத்தின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனை அடுத்து சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் 15 இடங்களில் போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் மதிப்புள்ள போலி பெருங்காய டப்பாக்களை கைப்பற்றிய போலீசார், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் பகுதிகளை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.