திண்டிவனம் அருகே தனியார் பள்ளியில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
திண்டிவனம் அருகே உள்ள ரெட்டனையில் கிரீன் பாரடைஸ் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பள்ளி முதல்வர் கார்த்திகேயனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.