தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 2024 நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.11.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்ட்டல் 2024, ஜூன் 30 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திறக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முதலில் தேசிய உதவித்தொகை போர்ட்டலில் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுத்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் போர்ட்டலில் பதிவு செய்வதற்கான விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs என்ற இணையதளத்தில் அறியலாம்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மாணவர்கள், தொடக்கக் கல்வியுடன், அதாவது எட்டாம் வகுப்புக்குப் பிறகு இடைநிற்றலைத் தடுக்கவும், மேல்நிலைக் கல்வியை, அதாவது பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை முடிக்க ஊக்குவிக்கவும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் செயல்படுத்தப்படும் ‘தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்’ மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாநில / யூனியன் பிரதேச அரசுகளால் நடத்தப்படும் உதவித்தொகைக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் புதிய உதவித்தொகைகளை இந்தத் திட்டம் வழங்குகிறது. மாணவர்களின் கல்வி செயல்திறனின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை புதுப்பித்தல் முறையில் உதவித்தொகை தொடர்கிறது. இத்திட்டம் மாநில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உதவித்தொகை தொகை ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ .12000 ஆகும்.
01.11.2024 நிலவரப்படி, 86323 புதிய மற்றும் 162175 புதுப்பித்தல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்திற்கு மிகாமலும், ஏழாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான தரத்திற்கு சமமாகவும் இருக்க வேண்டும் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 5% தளர்வு). தேசிய உதவித்தொகை போர்ட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் உதவித்தொகை விண்ணப்பங்கள் சரிபார்ப்புக்கான கடைசி தேதி 30.11.2024; 2-ம் நிலை சரிபார்ப்புக்கு கடைசி தேதி 15.12.2024 ஆகும்.