வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் 15 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் மானிய தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம்.
ஏற்கனவே உள்ள UYEGP மற்றும் NEED திட்டத்தில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில் செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர் 45 வயது வரை கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும் NEED திட்டத்தில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி., பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர்க்கு 55 வயது வரையிலும் வங்கியில் விண்ணப்பிக்கலாம்.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர் 610004 (தொலைபேசி எண்: 04366-224402) என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.