1330 திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு. கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ/ மாணவியர்களுக்குத் தலா ரூ.15,000 (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
2024 – 2025 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள். சிறப்புகள், சிறப்புப் பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ/மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து 30.10.2024-க்குள் காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 044-27233969 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.