தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருப்போம். பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டும் வைத்திருப்போம். வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படும் ஏ.டி.எம்-க்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏடிஎம்-மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் ரூ.173 பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள PIB (Press Information Bureau), இந்த தகவலை தவறானது என்று கூறியுள்ளது. மேலும், வங்கி ஏடிஎம்-களில் ஐந்து முறை வரை யாராக இருந்தாலும் இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும் அதனை தாண்டி பணம் எடுக்கும் பட்சத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூபாய் 21 பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தம் செய்யப்படாது என்றும் அவ்வாறு வங்கியில் கூடுதல் தொகை பிடித்திருக்கும் பட்சத்தில் வங்கியில் நேரில் சென்று புகார் அளிக்கலாம் அல்லது RBI-யிடம் புகார் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.