தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
ஹாங்காங்கில் சளி மாதிரிகள் பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் சமீபத்தில் ஒரு வருடத்தில் மிக அதிக அளவை எட்டியது. மே முதல் வாரத்தில் இறப்புகள் உட்பட கடும் நோய் பாதிப்பு அதிகபட்சமாக 40ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கொரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை இத்தொற்று வேகமாகப் பரவி வருவதை காட்டுகிறது.
இதுபோல் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு மே முதல் வாரத்தில் வைரஸ் பாதிப்பு முந்தைய வாரத்தை விட 28% அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்தது. இதுபோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று, இதுவரை 18 பேருக்கு உறுதி செய்யப்படுவதாகவும், இது வழக்கமான எண்ணிக்கை எனவும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Read More: தோலில் அரிப்பு, கருப்பா மாறுதா?. ரத்தத்தில் ஆபத்து!. சுத்தம் செய்ய உதவும் சூப்பர் ஜூஸ்!