நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கேரளாவில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு பகுதியில் உள்ள பள்ளியில் சுமார் 19 மாணவர்கள் நோரோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில பெற்றோர்களுக்கும் இதே நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இங்குள்ள காக்கநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று குழந்தைகள் தற்பொழுது சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி கூறுகையில், பள்ளியின் 62 மாணவர்கள் மற்றும் சில பெற்றோர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தினர், அதைத் தொடர்ந்து இரண்டு மாதிரிகள் மாநில பொது ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையின் முடிவில் அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு, வீட்டிலிருந்தே ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.