பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய இந்திய ரயில்வே பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சதீஷ் குமார், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது வருகை தரும் யாத்ரீகர்களுக்கு இடமளிக்க ரயில்வே விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே ஜனவரி 14 அன்று 132 முதல் 135 சிறப்பு ரயில்களை இயக்கியது. 2025 மகா கும்பமேளாவின் மிகவும் புனிதமான நாளான வரவிருக்கும் மவுனி அமாவாசைக்கு ரயில் சேவைகளை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் 360 ரயில்களை ரயில்வே இயக்கவுள்ளது. இதில் 190 சிறப்பு ரயில்கள் ஆகும், பக்தர்களின் வருகையை சமாளிக்க மூன்று மண்டலங்களில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படுவதை உறுதி செய்வதோடு லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும். மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 5,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. இது சரியான நேரத்தில் மேம்பாடுகள் மற்றும் மேம்பட்ட திறனை உறுதி செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார். புதிய சாலை கீழ்ப்பாலங்கள் மற்றும் சாலை மேம்பாலங்கள், தண்டவாள இரட்டிப்பு மற்றும் ரெயில் நிலைய மேம்பாடுகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே பயணிகளின் வசதிகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜில் உள்ள ஒவ்வொரு நிலையத்திலும் போதுமான குடிநீர் மற்றும் உணவு விடுதிகள், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள் உள்ளன. அவசர காலங்களில், முதலுதவி மையங்களும் மருத்துவ கண்காணிப்பு அறைகளும் தேவையான உதவிகளை வழங்கும் என்றார்.