ஏற்கனவே அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக அந்த கட்சியின் தலைமை மார்தட்டிக் கொள்கிறது. இந்த ஒன்றரை கோடி தொண்டர்கள், அதிமுகவின் பொது செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, கட்சியின் உறுப்பினராக சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது ஒரு புதிய இலக்கை இந்த கட்சி எட்டி உள்ளது.
சென்ற ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு அதிரடி மாற்றங்களை கட்சியில் செய்து வருகிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மெல்ல, மெல்ல ஜெயலலிதாவை போலவே ஒரு ஆளுமை மிக்க தலைவராக அவர் மாறி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அதிமுகவின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அதனை புதுப்பித்துக் கொள்ள புதிய விண்ணப்ப படிவங்களை விநியோகிக்கும் பணி, கடந்த மே மாதம் நான்காம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து, செயல்பட்டு வந்த சூழ்நிலையில், தற்சமயம் 2,0044,400 நபர்கள் இதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிமுகவின் பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரையில் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில், அது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே வரும் 17ஆம் தேதி மாலை 5 மணி வரையில் உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.