தற்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பரவலாக மழை பெய்து வந்தாலும் கூட, வெள்ளம் வரும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சோலன் மாவட்டம், ஜாடோன் என்ற கிராமத்தில், வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்த பகுதியில் பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து இருக்கிறது. சிம்லாவில், சிவன் கோவிலில், ஏற்பட்டிருக்கின்ற நிலச்சரிவு காரணமாக, அதில் சிக்கி, 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மழை வெள்ளத்தால், பலியான நபர்களுக்கு அந்த மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர், மக்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இந்த கனமழையின் காரணமாக, கல்கா, சிம்லா, சண்டிகர், மணாலி போன்ற முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதோடு, மின்சாரங்கள் பல்வேறு பகுதிகளில், துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின், பல்வேறு மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், அங்கு இன்னும் சில நாட்கள் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, நாளை வரையில், ஒட்டுமொத்தமாக ஒன்பது மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.