அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி ஜனவரி 19ஆம் தேதி மாலை பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். அன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
அடுத்த நாள் ஜனவரி 20ஆம் தேதி காலை சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, அங்கு ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து நேற்று ராமேஸ்வரம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய அவர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார். ராமநாத சுவாமி கோயில் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 21) ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை சென்றார். அங்குள்ள கடற்கரையில் ராமர் கால் பட்டதாக கூறப்படும் இடத்தில் மலர்கள், துளசி இலைகளை தூவி வழிபாடு செய்தார். பின்னர், அங்கு நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்த அவர், அங்குள்ள புனித ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அரிச்சல்முனை கடற்கரையில் இருந்துதான் இலங்கைக்கு ராமர் பாலம் கட்டப்பட்டதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. நாளை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி அரிச்சல்முனை சென்றது குறிப்பிடத்தக்கது.
பின்னர், ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார். அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புனித தீர்த்தம், புனித மண் ஆகியவற்றைக் கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி.