கடன் தொல்லை காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரில் சி.வெங்கடேஸ்வரன்(54), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றைக் கட்டி, அதில் தனது மனைவி நிர்மலா, மகன் ரிஷிகேசவன்(30) மற்றும் மகள் பூஜா(23) ஆகியோருடன் வசித்து வந்தார். சிவகாசியில் ரசாயன தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை, அவரது மனைவி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். மாலை வேளையில் வீடு திரும்பியவர், தனது கணவர் மற்றும் மகனை தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார். அவரது மகள் சடலமாக அருகில் இருக்கும் கட்டிலில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மூவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் பூஜா தற்கொலை செய்து இறந்துள்ளார். அவரது உடலை, அருகில் இருந்த கட்டிலில் தந்தையும் சகோதரனும் சேர்ந்து வைத்துவிட்டு, பின்பு அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் கடன் உள்ளது என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடன் தொல்லை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அம்மாபேட்டை போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கூடுதல் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.