ரெட்டியார்பாளையம் பகுதியில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற 3 பெண்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் மூதாட்டி செந்தாமரை (72). இவர், இன்று காலையில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வெளியே வரவில்லை என்றதும் அவரது மகள் காமாட்சி உள்ளே சென்று பார்த்துள்ளார். இதில் அவருக்கும் விஷவாயு தாக்கியுள்ளது. இதனால் அவரும் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இவர் மயக்கமடைந்ததை பார்த்து அவரது மகள் பாக்கியலட்சுமி என்ற 15 வயது சிறுமியும் சென்றுள்ளார். இதில் அவரும் மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். இதேபோல் அங்குள்ள பக்கத்து வீட்டில் உள்ள பெண் ஒருவரும் கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்தார். இதில் அவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து தான் இந்த விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இங்கு சரியாக பாதாள சாக்கடை கழிவுகள் நீக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இந்த பாதாளா சாக்கடை வழியாக தான் விஷவாயு பரவியதாக அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர். மேலும், அந்த தெருவில் உள்ள அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.