சேலம் மாநகர் குகை பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (26). ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா (25) இவர்களுக்கு வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவுக்கும் பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் சண்முகப்பிரியா கணவரை விட்டுவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடன் தமிழரசன் உடன் வாழ்ந்து வருகிறார்.
இருவரும் உல்லாசமாக இருந்த போது மூன்று வயது சிறுவன் வெற்றிமாறன் அழுததால் ஆத்திரத்தில் தமிழரசன் சிறுவனை கண்மூடித்தனமாக கொடூரமான முறையில் தாக்கியுள்ளான். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, ஆறு வயது சிறுவன் வெற்றிவேல், எனது அப்பா தமிழ் எனது தம்பியை அடித்தார் என மழலை வார்த்தையில் பேசியது அருகில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது. மூன்று வயது சிறுவனை தாயின் கள்ளக்காதலர் கொடூரமாக தாக்கி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.