3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2024 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 ஆசிரியரின்றி உபரி (Surplus Post without person) பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதரப்படிகள் ஆகியவற்றினை நடைமுறையில் உள்ள IFHRMS மூலமாக பெற்று வழங்க ஏதுவாக, அப்பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட வெவ்வேறு அரசாணைகளை ஒருங்கிணைத்தும் மற்றும் அப்பணியிடங்களுக்கு, அப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீடிப்பு வழங்கியும் ஆணைகள் வெளியிடப்பட்டது.
இப்பணியிடங்களுக்கு 18.05.2023 முதல் 31.07.2024 வரை ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டது. மேற்காணும் 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2024 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று மேற்குறிப்பிட்டுள்ள 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக 01.08.2024 முதல் 31.01.2025 முடிய மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது.
மேற்படி அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.