மழை பெய்து கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் டோல்கேட் மீது மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் டோல்கேட் இயங்கி வருகிறது. கடலோர பகுதியான ஷிரூரில் நேற்று மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், மாலை 4 மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று டோல்கேட்டை வேகமாக கடக்க முயன்றுள்ளது. அதை கவனித்த டோல்கேட் ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இதனை செய்து கொண்டிருந்தனர். மூன்று தடுப்பு கட்டைகளில் இரண்டு அகற்றப்பட்டுள்ளது. மற்றொன்றை டோல்கேட் ஊழியர் அகற்றிக் கொண்டிருக்கும் போது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த வேளையில் தடுப்புகள் மீது மோதாமல் இருக்கவும், டோல்கேட்டில் மெதுவாக செல்லவும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகத்தை குறைக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் பாய்ந்து வந்து டோல்கேட் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி, 2 உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், டோல்கேட் ஊழியர் ஒருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஓட்டைநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் டோல்கேட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.