இந்தியாவில் 4,80,000 சாலை விபத்துகள், 1,80,000 உயிரிழப்புகள் மற்றும் சுமார் 4,00,000 படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்தியாவில் நிகழும் பெரும்பாலான சாலை விபத்துக்கள், அதன் வடிவமைப்பு, கட்டுமானம், மேலாண்மை ஆகியவற்றில் உள்ள மோசமான நடைமுறைகள் மூலம் முறையற்ற சாலை அமைப்புகளாலும் ஏற்படுகின்றன. ஸ்பெயின், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படுவதைப் போலவே சாலைகள் அமைப்பதில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும்.
இந்தியாவில் 4,80,000 சாலை விபத்துகள், 1,80,000 உயிரிழப்புகள் மற்றும் சுமார் 4,00,000 படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றில் விபத்துக் காரணமாக உயிரிழந்தவர்களில் 1,40,000 பேர் 18-45 வயதுக்குட்பட்டவர்கள். பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். சாலை விபத்துகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
மோசமான திட்டமிடல், சாலைகளின் வடிவமைப்பு காரணமாக சாலை விபத்துக்கள் அதிகரிக்கின்றன. தரமற்ற சாலைகள் குறித்த அறிக்கைகளையும் சுட்டிக்காட்டினார். சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, 2030-ம் ஆண்டுக்குள் விபத்து விகிதங்களை 50 சதவீதம் அளவிற்கு குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் தொழில்துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு கட்கரி வலியுறுத்தினார். பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
வாகனங்களை இயக்குபவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அவசரகால மருத்துவ சேவைகளின் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். சர்வதேச சாலை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த உச்சிமாநாடு புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், தொழில் நிறுவனங்களிடமிருந்து அதிநவீன தீர்வுகளை கண்டறிவதற்கும், அறிவு சார் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கு, அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் நிபுணர்கள் ஆகியோரக்கான வாய்ப்புகளை வழங்கும் என்றார்.