சரியான பயனாளிகளுக்கு பொது விநியோக முறையின் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இகேஒய்சி எனப்படும் மின்னணு முறை நடைமுறையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; டிஜிட்டல் மயம், வெளிப்படைத்தன்மை, திறமையான விநியோக நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பொது விநியோக முறையை சீர்திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் காரணமாக, இடையிலேயே பலன் கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு இலக்குகள் எட்டப்பட்டு வருகின்றன.
விநியோகத்தைப் பொறுத்தவரை இந்திய உணவுக் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான செயல்பாடுகளும் சேவைகளும் ஒருங்கிணைக்கப்படுவதற்கு விநியோகத் தொடர் நிர்வாக முறை கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை முறைப்படுத்துவதற்கு மத்திய உணவு கொள்முதல் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்தில் ஒதுக்கப்படும் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கான முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
விநியோகத்தைப் பொருத்தவரை 80.6 கோடி பயனாளிகளைக் கொண்ட 20.4 கோடி குடும்ப அட்டைகளின் விநியோக நடைமுறை முழுவதும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையால் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளில் 99.8%மும் தனிப்பட்ட பயனாளிகளில் 98.7 சதவீதமும் ஆதார் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள ஏறத்தாழ அனைத்து நியாய விலைக்கடைகளிலும் 5.33 லட்சம் மின்னணு எடை சாதனங்கள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த சாதனங்கள் ஆதார் மூலம் உறுதி செய்யப்படுவதால் சரியானவர்களுக்கு பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மொத்த உணவு தானியங்களில் 98 சதவீதம் தற்போது ஆதார் உறுதிப்படுத்துதல் மூலம் விநியோகிக்கப்படுவதால் கசிவுகள் குறைந்துள்ளன. தகுதியற்ற பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
சரியான பயனாளிகளுக்கு பொது விநியோக முறையின் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இகேஒய்சி எனப்படும் மின்னணு முறையிலான உங்கள் வாடிக்கையாளர்களை அறியுங்கள் என்ற பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி 64 சதவீத பயனாளிகள் இதன் மூலம் பதிவு செய்துள்ளனர். இந்த நடைமுறை காரணமாக நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக்கடையிலும் பயனாளிகள் பொருட்களைப் பெறமுடியும். மேலும் போலி குடும்ப அட்டைகள் களையப்பட்டு வருகின்றன. இதுவரை 5.8 கோடி போலி குடும்ப அட்டைகள் களையப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் 80.6 கோடி பயனாளிகளுக்கு விலையில்லாத உணவு தானியங்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயம், சரியான இலக்கு, விநியோகத்தொடர் நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் அரசு சார்பிலான உணவுப் பாதுகாப்பு முயற்சிகளில் உலக அளவில் இந்தியா முத்திரை பதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.