தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர் மாணவிகளின் பெற்றோருக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணிலிருந்து சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் அரசு கல்வி உதவி தொகை வழங்கும் பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்து உங்களுடைய குழந்தைகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் உதவித்தொகை பெறுவதற்கான க்யூ ஆர் குறியீட்டை whatsapp மூலமாக அனுப்பி வைப்போம் அதை ஸ்கேன் செய்தால் உதவி தொகை வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த குறியீட்டை ஸ்கேன் செய்த அடுத்த சில நொடிகளில் பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து தொகை மாயமாய் மறைந்தது. பின்னர் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பெற்றோர்கள் சிலர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நாமக்கல் மாவட்டம் சவுரி பாளையத்தை சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸ் ராஜ்(28) ஜேம்ஸ்(30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம்(34) உள்ளிட்டோர் இந்த மோசடியில் ஈடுபட்டனர் என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது கூட்டு சதி, மோசடி, போலியான ஆவணங்கள் தயாரித்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்கள் தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்டவர்கள் மாணவ, மாணவிகள் தொடர்பான தரவுகளை மோசடி கும்பலிடம் இருந்து பெற்று அதை பயன்படுத்தி பெற்றோரை ஏமாற்றி இருக்கிறார்கள். இதுவரையில் 10 பேர் புகார் வழங்கியுள்ளனர். 7 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக புகார் வந்திருக்கிறது. இவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களிடமும் மோசடி செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் புதுடெல்லியில் இவர்களுக்கு தெரிந்த நபர்கள் மூலமாக சைபர் கிரைம் மோசடிகளை செய்வது தொடர்பாக பயிற்சி மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் இந்த மோசடி யுக்தி மட்டுமல்லாமல் லாட்டரி ரிவார்டு பாயிண்ட் உள்ளிட்ட மேலும் 4 மோசடி திட்டங்களை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து லேப்டாப், 22 சிம் கார்டுகள், 44 செல்போன்கள், 7 atm கார்டுகள், 7️ வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்