பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கூறி வந்த நிலையில், தற்போது பெண்கள் தங்களின் சொந்த வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பது இல்லை. அதிலும் கொடூரமான காரியம் என்னவென்றால், சொந்த தந்தையே தனது மகள்களை பலாத்காரம் செய்யும் செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம்.
அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையத்தில் பெண் ஒருவருக்கு நடந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கொடூர சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, போர்ட்டர் (சுமை தூக்கும் தொழிலாளி) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் தனது மருமகனுடன் மும்பையை சுற்றிப்பார்க்க வந்துள்ளார். அப்போது பாந்த்ரா ரயில் நிலையத்தில் தங்குவதற்கு சரியான இடம் இல்லாததால், அவர் அங்கு நிறுத்தப்பட்திருந்த ரயிலில் படுத்து உறங்கியுள்ளார். இதனை கவனித்த ராகுல் ஷேக் என்பவர், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ரயிலின் கார்டு பெட்டிக்கு இழுத்துச்சென்று அங்கு வைத்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ராகுல் ஷேக் ரயில் நிலையத்தில் போர்டர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் குற்றவாளியின் புகைப்படம் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் அதிகாலையில் 1.50 மணிக்கு நடந்த நிலையில், குற்றவாளி மீண்டும் காலை 5 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.