சேலத்தில் இருந்து சென்னை புறப்படவிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அதி பயங்கரமாக மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தைச் சேரந்த திருநாவுக்கரசு (65) , ரவிக்குமார் (41) , செந்தில் வேலன் (40 ) , சுப்பிரமணி (40) உள்பட 7 பேர் சென்னை சென்றுகொண்டிருந்தனர். இவர்களின் உறவினர் சென்னையில் இருக்கின்றார். அவர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா விசேஷத்திற்காக குடும்பத்தினர் ஆம்னி பேருந்தில் ஒன்றாக செல்ல இருந்தனர். இதற்காக டிக்கெட் எடுத்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தனர்.
இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னைக்கு 11.30 மணி அளவில் பேருந்து புறப்ப்டது. 12.45 மணி அளவில் பேருந்து பெத்தநாயக்கம்பாளையத்திற்கு வந்து பெட்ரோல் பங்கின் ஓரமாக நின்றது. பேருந்துக்காக காத்திருந்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் தாங்கள் சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சீர்வரிசைப் பொருட்களை ஒவ்வொன்றாக ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று பேருந்தின் பக்கவாட்டை உரசிக்கொண்டே வேகமாக சென்றது. இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த திருநாவுக்கரசு, ரவிக்குமார் , செந்தில் வேலன், சுப்பிரமணி மற்றும் பேருந்தின் கிளீனர் தீபன் என 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிளீனரின் உடல் சக்கரத்தில் சிக்கி உடல் நசங்கி சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றது.
விஜயா , பிரகாஷ் ,மாதேஸ்வரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் விஜயா பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் மொத்தம் 6 பேர் பலியாயினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விபத்து காரணமாக போக்குவரத்து வேறு வழியில் திருப்பிவிடப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவுக்கு புறப்பட்ட குடும்பத்தினர். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது உறவினர்கள், குடும்பத்தினர் , கிராமக்கள் அனைவரையும் கதறவைத்துள்ளது.
விபத்து ஏற்படுத்திய லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டான். அவருக்கு போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.