கேரள மாநிலத்தில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் வைத்து மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரும்பணம் விவசாயிகள் காலணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியைச் சார்ந்த மனோகரன் என்ற 52 வயது நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை நிறுத்துமாறு காவலர்கள் செய்கை செய்துள்ளனர். அந்த நபர் உடனடியாக வாகனத்தை நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி சென்று வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அவரை தாக்கியதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபரிடம் மது அருந்தி இருக்கிறாரா? என்ற சோதனையை நடத்தப்பட்ட பின்னர் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையின் அறிக்கை படி “வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட மனோகரன் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார் அங்கு வைத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை திருப்பணித்துறை தாலுகா மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு கொண்டு சென்ற போது மனோகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக கைது செய்யப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.