கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அளவுக்கு அதிகமான மது போதையால் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு தீ பற்றவைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கு ஏறினால் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்று பொதுவான ஒரு சொல்லாடல் உண்டு. சில சம்பவங்கள் நடப்பதை பார்க்கும் போது அது உண்மைதான் நம் முன்னோர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்குமளவிற்கு அந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதைப் போன்ற ஒரு சம்பவம் தான் போதையில் தன்னிலை மறந்த இளைஞர் ஒருவரால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏற்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் கோபக்குமார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்ததாக தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கோபகுமார் முழுவதுமாக குடித்துவிட்டு போதையில் வந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டில் இருந்தவர்கள் அவரைத் திட்டியதால் கோபமடைந்த இவர் தனது வீட்டிற்கு தானே தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். இதனால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இது தொடர்பாக கோபகுமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.