தர்மபுரி அருகே ஒன்பது மாதங்களுக்கு முன் கோவில் திருவிழாவின் போது காணாமல் போன பிளஸ் டூ மாணவி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் ஆரூர் அருகே உள்ள எஸ் அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சார்ந்தவர் விவசாயி பெருமாள். இவரது மகள் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படித்து வந்தார். பொது தேர்வுகள் முடிந்ததை அடுத்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக வந்திருக்கிறார்.
திருவிழாவின் போது காணாமல் போன இவரை எல்லா இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் பயந்து போன பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினரும் கோயம்புத்தூர் மற்றும் கரூர் தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் எஸ் அம்மாபாளையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர்.
சதைகள் எதுவும் இல்லாமல் வெறும் எலும்புக்கூடு மட்டுமே தூக்கில் தொங்கியபடி இருந்தது. அதன் அருகே கிடந்த கிளிந்த துணிகள் மற்றும் வாட்ச் ஆகியவற்றை வைத்து அடையாளம் காட்டுவதற்காக காணாமல் போன சிறுமியின் பெற்றோரை அழைத்தது காவல்துறை. அதன் பேரில் அங்கு சென்ற விவசாயி பெருமாள் மற்றும் அவரது மனைவி இது தங்களது மகளுடையது தான் என காவல்துறையிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து காவல்துறை கிடைத்த எலும்பு கூட்டின் பாகங்களை டி என் ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி எங்கேயும் நலமுடன் இருப்பார் என்று நினைத்த பெற்றோருக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது . இந்த சிறுமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காணாமல் போன மாணவி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இரும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.