தனது தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட நடன பயிற்சியாளரை கண்டித்த சிறுமிக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் நடன பயிற்சியாளர். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் நடன இயக்குனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள கேகே நகரில், 17 வயது சிறுமி தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த சிறுமியின் தாய், முறையாக பயிற்சி பெற விரும்பினார். அதனை அறிந்த அவரது கணவர், ராயப்பேட்டை முகமது உசேன் தெருவை சேர்ந்த ஷெரிஃப் என்ற நடன இயக்குனரை அணுகி தன் மனைவிக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நடன பயிற்சிக்காக அவரது மனைவி சென்ற வேளையில், நடனப் பயிற்சியாளருக்கும், அந்தப் பெண்ணிற்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத போது ஷெரிஃப் அந்த பெண்ணுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்ததாகத் தெரிகிறது.
தனது தாயின் நடத்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, இதனை கண்டித்ததுடன், இந்த உறவு தொடர்ந்தால் தனது தந்தையிடமும் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷெரிஃப், அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததோடு, அவரது கையை முறுக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும் சிறுமியின் பள்ளிக்கே நேரில் சென்று, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.
இதனை அறிந்த அந்த சிறுமியின் தந்தை, கடந்த ஜனவரி 24ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் நடன பயிற்சியாளர் ஷெரிஃபை கைது செய்த துறையினர், அவரை விசாரணைக்கும் உட்படுத்தி வருகிறார்கள். அந்த சிறுமியும், அவரது தந்தையும் நடந்த சம்பவங்களால் துயருற்றனர்.