சிவப்பு துணியை அசைத்து ரயில் விபத்தைத் தடுத்த மூதாட்டியை ரயில்வே காவல்துறை கௌரவித்துள்ளது.
மங்களூருவின் புறநகர் பகுதியான பஞ்சண்டி அருகே உள்ள மந்தாராவில் 70 வயதான சந்திரவதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த வாரம் ரயில் தண்டவாளத்தின் மீது மரம் விழுந்ததைக் கண்ட அவர், உடனடியாக சிவப்பு துணியை அசைத்தார். அதை கவனித்த ரயில் ஓட்டுநர், முன்னெச்சரிக்கையாக, ரயிலின் வேகத்தை குறைத்து, மரத்திற்கு முன்னால் ரயிலை நிறுத்தினார்.. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், அப்பகுதி மக்கள் உதவியுடன் தண்டவாளத்தை சீர்செய்தனர்.. பின்னர், ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இதுகுறித்து பேசிய சந்திரவதி “நான் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, என் வீட்டின் வராண்டாவில் நின்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஏதோ விழும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்தபோது ரயில் தண்டவாளம் மீது ஒரு பெரிய மரம் விழுந்து கிடந்தது. அந்த நேரத்தில் ரயில் வரும் நேரம் என்று எனக்குத் தெரியும். யாரிடமாவது தகவல் தெரிவிக்க வீட்டிற்குள் வந்தேன்..
ஆனால் ரயிலின் ஹாரன் சத்தம் கேட்டது. கடவுளின் அருளால், வீட்டில் ஒரு சிவப்பு துணி கிடந்ததைக் கண்டேன், நான் ரயில் தண்டவாளத்தில் ஓடி, சிவப்பு துணியை அசைத்தேன். பின்னர் ரயில் நின்றுவிட்டது.. எனக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், ரயில் மரத்தில் மோதும் அபாயத்தை கருத்தில் கொண்டு நான் கவலைப்படவில்லை..” என்று தெரிவித்தார்..
அந்த மூதாட்டியின் சாதூர்யமான நடவடிக்கையால் பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டது.. மேலும் ரயிலில் இருந்த பலரின் உயிரையும் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. ரயில்வே போலீஸாரும் சந்திரவதியின் துணிச்சலை பாராட்டினர்.. மங்களூருவில் உள்ள ரயில்வே காவல்துறை, அதன் அனைத்து மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து, சந்திரவதியின் வீரச் செயலை பாராட்டினர்..