வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து அதன் மூலம் 50 நபர்களிடமிருந்து 91 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சென்னை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் மணியம் ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவர் சைலேஷ். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த முகநூல் விளம்பரத்தை பார்த்து சென்னை ஆவடியைச் சார்ந்த அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த நிறுவனத்தில் ஆவடி காமராஜ் நகரைச் சார்ந்த சையத் மின் ஹாஜீதீன் (40) மற்றும் சிலர் வெளிநாட்டில் வேலை பெறுவதற்கு மூன்று லட்ச ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும் எனக் கூறினர். அதன்படி 3 லட்ச ரூபாயை செலுத்தி இருக்கிறார் சைலேஷ். ஒரு வருடமாகியும் எந்த ஏற்பாடும் நடக்காததால் ஆவடி சென்று அந்த நிறுவனத்தில் பணத்தை திருப்பி தர கேட்டிருக்கிறார் சைலேஷ். அந்த நிறுவனம் பணத்தை தர மறுத்ததால் இவர் ஆவடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார்.
இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட ஆவடி காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் இந்த மோசடி வழக்கு தொடர்பாக விசாரித்து அருகே சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஆவடியைச் சார்ந்த சையத் மின் ஹாஜீதீனை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்திருக்கின்றன. சையத் மின் ஹாஜீதீன் வேறு சிலருடன் இணைந்து போலியான நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பேஸ்புக் வாயிலாக தமிழ்நாடு கேரளா கர்நாடகாவைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 91 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.