திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வேடசந்தூர் சாலையில் உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மனோஜ் குமார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு வயது 20. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மது அருந்தியதாக தெரிகிறது. அதனால் ஏற்பட்ட மது போதையில் அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவனை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்திருக்கிறார். பின்னர் அந்தச் சிறுவனை ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அவனுக்கு சாக்லேட் வாங்கி தருவதாக ஏமாற்றி தான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுவனிடம் மனோஜ் குமார் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அந்த சிறுவனின் உடலெங்கும் கடித்தும் வைத்துள்ளார். இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுவனை மிரட்டியிருக்கிறார். அதன் பிறகு வீடு திரும்பிய சிறுவன் உற்சாகமின்றி மிகவும் சோகமாகவே காணப்பட்டிருக்கிறான். இது தொடர்பாக சிறுவனிடம் அவனது பெற்றோர் விசாரிக்கவே மனோஜ் குமார் செய்த விஷயங்களை அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமாரை கைது செய்தனர். பெண் குழந்தைகளுக்கு தான் இது போன்ற தொல்லை இருக்கிறது என்று பார்த்தால் ஆண் குழந்தைகளுக்கும் அதே போன்ற பிரச்சனைகள் இருப்பது இது போன்ற நிகழ்வுகளின் மூலம் தெரிய வருகிறது இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.