“செல்பி எடுக்கலாம் வா” என்று மனைவியை மலை உச்சிக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தைச் சார்ந்தவர் ராஜ் ரஞ்சன் மிஸ்ரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிஷா குமாரி என்று பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது மனைவி நிஷா குமாரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ராஜராஜன் புதியதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்தக் காரில் ரஞ்சனும் அவரது மனைவி நிஷாவும் தியோகரில் உள்ள கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.
அப்போது வழியில் ஜமுயி மாவட்டத்தில் பாட்டியா பள்ளத்தாக்கு பகுதிகளில் வாகனத்தை நிறுத்திய ரஞ்சன் செல்ஃபி எடுத்து விட்டு செல்லலாம் என மனைவியை அழைத்து இருக்கிறார். இவரது பேச்சை நம்பி அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அடித்து துன்புறுத்தி பள்ளத்தாக்கு பகுதியில் தள்ளிவிட்டு இருக்கிறார் ரஞ்சன். இதனால் மனைவி இறந்து விட்டதாக நினைத்த அவர் வீடு திரும்பியுள்ளார். பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த நிஷா தட்டு தடுமாறி வெளியே வந்து அப்பகுதியில் சென்ற வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்ததில் நிஷா தனது கணவர் ரஞ்சன் தான் தன்னை கொலை செய்ய முயன்றார் என்பதையும் காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராஜ் ரஞ்சன் மிஸ்ராவை காவல்துறையினர் தீவிரமாக தேடினர். காவல்துறையின் தேடுதல் வேட்டையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய தொடர்பிருந்த காரணத்தால் தன்னுடைய மனைவியை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்து இருந்தார் இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.