எப்போதும் நமக்கு பிடித்தவர்களோ அல்லது நம் மனதிற்கு நெருக்கமானவர்களோ, நம்மை நன்றாக புரிந்து கொண்ட நபரோ, நம்மை விட்டு பிரிந்து செல்லும்போது, நம்முடைய மனநிலை இருக்கும் நிலை என்ன என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் வெளியே சொல்லிவிட முடியாது.
ஆனால், அதையெல்லாம் கடந்து தான் வர வேண்டும். அதை கடந்து வரும்போது நாம் பல்வேறு மன மாற்றங்களை சந்திப்போம். பல்வேறு துக்ககரமான நிகழ்வை அனுபவிப்போம். அதெல்லாம் வாழ்க்கையில் ஒருவித அனுபவம்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவம், அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற கொல்லைமேடு பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்திருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ராதிகா(27) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தான், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர், ராதிகாவுக்கு பிரகாஷ் என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது ராதிகா 5 மாத கர்ப்பிணி பெண்ணாக உள்ளார். இந்த நிலையில், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சுமதி, கடந்த 29ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
ஆகவே தாய் உயிரிழந்த துக்கத்தில், மன உளைச்சலில் இருந்த ராதிகா, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, ராதிகாவின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.